பொது விஷயங்கள்

Basically நான் ஒரு சோம்பேறி!

மக்களே, நான் இந்த blog ஆரம்பிச்சப்போ வாரம் ஒரு தடவையாவது எழுதனும் என்று நினைத்தேன். But, இது வரைக்கும் மொத்தமாவே ஒரு தடவைதான் எழுதியிருக்கேன். இதுக்கு காரணம் “தமிழ்ல type பண்றதுதான்” அப்டின்னு நான் சொன்னா நீங்க என்ன நம்பவா போறீங்க? தமிழ்ல type பண்றது நிஜமாவே ரொம்ப கஷ்டங்க. But, அதையெல்லாம் விட “Basically நான் ஒரு சோம்பேறி” அப்டிங்கறது தான் உண்மை.

காலேஜ் படிக்கறப்போ சில பேர் (esp. நம்ம குண்டு கோபால்) எல்லா வேலையும் ஒழுங்கா செய்வாங்க, ஆனா குளிக்க மட்டும் மாட்டாங்க. வாரம் ஒரு தடவை, இல்லைன்னா 10 நாளைக்கு ஒரு தடவைதான் குளிப்பாங்க. கேட்டா, “அது வேற ஒரு extra வேலை மச்சான்”னு சொல்லுவாங்க. இன்னும் சில பேர் 9 மணி காலேஜுக்கு, எட்டே முக்காலுக்கு தான் எழுந்திருப்பாங்க. ஆனா குளிச்சு, சாப்பிட்டு நமக்கு முன்னாடி கிளாஸ்ல உட்காந்திருப்பாங்க. நான் என்ன சொல்ல வர்ரேன்னா, ஊர்ல இருக்கிற எல்லாரும் எதாவது ஒரு விஷயத்துல சோம்பேறிதாங்க.

“Often the smartest people are the laziest ones” – சோம்பேறிங்கதான் புத்திசாலிங்கன்னு சொல்றாங்க. ஒரு புத்திசாலி சோம்பேறியாவே இருக்கனும்னு நினைச்சுட்டா அவன் உலகத்துக்கு எதாவது தரப்போறான்னு அர்த்தம். மிக்ஸி, கிரைண்டர்ல ஆரம்பிச்சு கார், கம்ப்யுட்டர் வரைக்கும் எல்லாத்துக்கு பின்னாடியும் ஒரு சோம்பேறி இருக்கிறாங்க. சோம்பேறிதனத்த இந்த angleல பார்த்தா அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை.

எல்லாத்திலேயும் ஒரு அளவோட இருந்தா பிரச்சனையே இல்லை. ஆனா சில பேர் வரம்பு மீறி போவாங்க. அவங்களையெல்லாம் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை. சோம்பேறிதனத்த காலி பண்றதுக்கு ஒரு நல்ல வழி : ஒரு விஷயத்த செய்யனும்னா செஞ்சிருங்க. “செய்யனுமா” அப்டின்னு ஒரு ‘?’ போட்டா சோலி முடிஞ்சி போச்சு. படிக்கனும்னா படிச்சிருங்க, எழுதனும்னா எழுதிருங்க. Take Action – இது தான் சோம்பேறிதனத்த விரட்டுறதுக்கு ஒரே வழி.

“இத நீங்க செய்றது” அப்டின்னு யாரோ கேக்கறது என் காதுல விழுது. நானே யாரோ என்கிட்ட சொன்னத உங்ககிட ஒட்டிக்கிடு இருக்கேன். வந்தோமா, படிச்சோமா அப்டியே நாலு பேருக்கு இத advice பண்ணோமான்னு போவிங்களா, அத விட்டிட்டு கேள்வியெல்லாம் கேட்டுகிட்டு……..

நான் அப்பவே சொல்லல, “ஊர்ல இருக்கிற எல்லாரும் எதாவது ஒரு விஷயத்துல சோம்பேறிதாங்கதான்”னு.. கீழ இருக்கற படம் அதுக்கு ஒரு sample..


கடவுள் உண்டா? இல்லையா?

சின்ன வயதில் என் தாத்தாவிடம் ராமாயணம், மகாபாரதம் போன்ற பல கதைகள் கேட்டிருக்கிறேன். குறிப்பாக கிருஷ்ணர் கதைன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை மட்டும் அடிக்கடி கேட்பேன். அதன் பிறகு பள்ளி – விவேகானந்தா வித்யாலயா. கடவுள் பத்தி ரொம்ப பேசுவாங்க. எனக்கு இந்தியா மேலும், கடவுள் மேலும் ஒரு ஈர்ப்பு வர அந்த பள்ளிதான் காரணம்.

அப்ப எல்லாம் கடவுள் எனக்கு ஒரு நெருங்கிய நண்பன். என்ன தப்பு செஞ்சாலும் ஒரு சாரி சொன்னா போதும். அவன் என்னிடம் மட்டும் கோவிக்க மாட்டான். அதனாலோ என்னவோ நான் நிறைய தப்பு செஞ்சிருக்கேன். பொய் சொல்றது, திருடுறது, ஸ்கூலுக்கு கட் அடிக்கறது etc etc… நிறைய சொல்லலாம். எல்லாரும் செய்றதுதான். நீங்க மட்டும் யோக்கிய்மா? கொஞ்சம் flashbackஅ யோசிச்சு பாருங்க. சரி matterக்கு வர்றேன்… எங்க விட்டேன்..ஆங்..கடவுள். நான் என்ன தப்பு செஞ்சாலும் கடவுள் எனக்கு ஒரு Partner. எதிலேயும் பங்கு கேட்காத Partner. என்னமோ தெரியல, நான் அவர்கிட்ட மட்டும் அவ்வளவா பயந்தது இல்ல. இப்படி கடவுளுக்கும், எனக்கும் ஒரு நல்ல relationship இருந்தப்போ நான் சின்னதா ஸ்கூல் படித்து முடித்து விட்டேன்.

question_exclamation

அடுத்தது காலேஜ். ஹாஸ்டல் வாழ்க்கை. வீட்டை விட்டு முதன் முதலா வெளிய போனேன். புது இடம். புது நண்பர்கள். சொந்தமா யோசிக்க ஆரம்பிச்ச வயசு. கடவுள கிட்டத்தட்ட மறந்தே போனேன். ஒரு செமஸ்டரே முடிஞ்சு போச்சு. ரிசல்ட்டுக்காக வெய்ட்டிங். எத்தனை பேப்பர்ல போகும்னே தெரியல. கடவுள்கிட்ட எப்படியாவது பேப்பர் எல்லாம் கிளியர் பண்ண வச்சுடுப்பான்னு ஒரு அப்ளிகேசன் போடலாமான்னு ஒரு யோசனை…. ஆனா நான்தான் அப்ப யோசிக்க ஆரம்பிசுட்டேனே. அப்புறம் எங்க கடவுள். மூனு பேப்பர்ல அவுட். அது எனக்கு ஒன்னும் பெருசா தோணலை(படிக்கறது என் அம்மாவா இருந்தா, I’m sorry…. அது ரொம்ப பழைய கதை…முடிஞ்சு போச்சு. feel பண்ணி எனக்கு phone பண்ணாதீங்க ;) ) அப்ப கடவுள் உண்டா இல்லையான்னு எனக்கு ஒரே confusion! உண்டுன்னு ஒத்துக்கவும் முடியல. இல்லைன்னு ஒதுக்கவும் முடியல. கடவுள் சின்ன வயசுல இருந்து என் மனசுல ஆழமா பதிஞ்சுட்டார். ஸ்௬ல்ல எப்பவோ படிச்ச வாக்கியம் – “பசுமரத்து ஆணிபோல”… அந்த மாதிரி என் மனசுல ஆழமா பதிஞ்சுட்ட கடவுள என்னால ஒத்துக்கவும் முடியல, ஒதுக்கவும் முடியல. கடைசியா ஒரு முடிவுக்கு வந்தேன். கடவுள் இருக்கார். ஆனா அவர் கிட்ட எதுவும் கேட்க ௬டாது. அவர்கிட்ட கேட்கறதும், குறை சொல்லறதும் எனக்கு பிச்சை கேட்கற மாதிரி இருந்தது. “ஏற்பது இகழ்ச்சி!” – நினைவுக்கு வந்தது. கடவுளுக்கும் எனக்கும் இடைவெளி ௬டியது. கடவுளின் பெயரால் மதமாற்றம், வன்முறை, தீவிரவாதம்….. காண சகிக்கவில்லை. அத்தனைக்கும் காரணம் கடவுள் இல்லை. ஆனால் கடவுள் என்ற ஒருவர் இருப்பதினால் தானே என்று எண்ணிய மறுகணம், கடவுள் என் கண்களில் இருந்து மறைந்து போனார். கல்லூரி முடிந்து விட்டது. இரண்டு வருடங்கள் ஓடி விட்டன……

சில மாதங்களுக்கு முன்… திடீர் என்று ஒரு திடுக்கிடும் கனவு. என் அம்மாவுக்கு ஏதோ அசம்பாவிதம் நடப்பது போல…. நான் பொதுவாக கனவுகளை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் என் அம்மா என்பதாலோ என்னவோ, தூக்கம் கலைந்தது. துக்கம் பிறந்தது. என்னை அறியாமல் என் மனம் கடவுளை அழைத்தது! சிரித்தான் அவன். அழுதேன் நான். என்னை மறந்து யாசிக்கிறேன். “ஏற்பது இகழ்ச்சி!” – இகழ்ந்தவன் ஆனதால் நான் வருந்தவில்லை. இகழ்ந்தவன் ஆன பின்பே கலைந்த தூக்கம் மறுபடி வந்தது. காலை எழுந்தேன். இரவு புத்தி ௨றங்கிக் கொண்டிருந்தது போலும். காலை என்னுடன் அதுவும் ௨றக்கம் கலைத்தது. இரவு நடந்த நிகழ்ச்சி புத்திக்கு எட்டியது. என் அம்மாவுக்கு phone செய்தேன். யாவரும் நலம் என அறிந்தேன். மனம் அமைதியானது. புத்தி கேள்வி கேட்டது – “இரவு இகழ்ந்தவன் ஆனதால் தான் இன்று அமைதியாக இருக்கிறாயா?” ஆம் என்றது மனம். இல்லை என்றது புத்தி.

புத்தியா? மனமா?
கடவுள் உண்டா? இல்லையா?
இன்று வரை பதில் தெரியாமல் நான்.

1 Comment more...

எனது முதல் தமிழ் பக்கம்

வணக்கம்.
இது எனது முதல் தமிழ் பக்கம்.
இந்த தளம் எனது மனதில் எங்கோ ஒளிந்திருக்கும் தமிழ் ஆர்வத்தின் ஓர் சிறிய வெளிப்பாடு.

உங்கள் தமிழ் பசிக்கு என்னால் முடிந்த அளவு உணவு அளிக்க முயற்சிக்றேன். பருப்பு வேகவில்லையென்றால் Adjust செய்து கொள்க.

இந்த தளத்தின் ஆங்கில பதிப்பை www.aruntheace.com என்ற முகவரியில் நீங்கள் காணலாம்.


Copyright © 1996-2010 Arun the ACE - தமிழ் பக்கம். All rights reserved.
iDream theme by Templates Next | Powered by WordPress